SURABOOKS

இல்லத்தரசிகள் வேலைவாய்ப்பு

வித்தியாசமான யோசனைகள், நடைமுறைப்படுத்துதலில் உள்ள புதுமை இவைகள் எல்லாம் வருமானத்திற்கு வழிவகுக்கும். கடந்த இதழில், இல்லத்தரசிகளுக்கு சொன்ன யோசனை பயனுள்ளதாக இருந்ததா? அந்த யோசனையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா என்பதை தெரிந்துகொள்ள, எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்” இதழ் ஆர்வமாய் இருக்கிறது. நாங்கள் இங்கு தரும் யோசனைகள் உங்களை எந்தளவிற்கு சிந்திக்க வைத்திருக்கிறது என்பதையும் எங்களுக்கு எழுதுங்கள்.

இது முழுக்க முழுக்க இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே வேலைசெய்யும் முறை என்பதால், ஏற்கனவே வீட்டில் கைத்தொழில் செய்து பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவில் அதில் லாபம் ஈட்டும் இல்லத்தரசிகளும் இந்தப் பகுதியில் தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம். நீங்கள் சொல்லும் தொழில் யோசனைகள் மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில், அவர்கள் தொழில் செய்து லாபம் ஈட்டும் வகையில் இருந்தால், எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர் இதழ் பெருமை கொள்ளும்.

ஒரு வேளை நீங்கள் வீட்டிலிருந்தே சிறுதொழில் செய்து, அதை பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறீர்களா? உற்பத்தி செய்ய உங்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறதா? அந்தத் தொழிலை இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே செய்யும் வாய்ப்புகள் இருக்கிறதா? அப்படியென்றால், அதையும் எழுதுங்கள். மற்ற இல்லத்தரசிகளுக்கும் பயனுள்ளதாய் அமையட்டும்.

பல யோசனைகள் இருக்கிறது. இப்படி தொழில் செய்தால், குறுகிய நேரத்தில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்ற ஐடியா பெண்மணியாக இருந்தால், உங்கள் புகைப்படத்துடன் உங்கள் யோசனையை” வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் சொல்லும் கருத்துகளும், யோசனைகளும் இலவசமாக இருக்க வேண்டும். பணம் கட்டி சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் விதத்திலேயோ, பணம் கட்டினால்தான் இந்தத் தொழிலை வீட்டிலிருந்தே பெண்கள் செய்ய முடியும் என்ற நிலையிலோ எந்த ஒரு படைப்பும் இந்தப் பகுதியில் அனுமதிக்கப்படாது. ஏனெனில், இந்தப் பகுதியின் அடிநாதத்தையே அது குலைத்துவிடும்.

இது முழுக்க முழுக்க இல்லத்தரசிகளுக்கானது. பணம் ஈட்டி கோடீஸ்வரனாக்கும் பகுதி அல்ல இது. தனக்கு இருக்கும் ஓய்வு நேரத்தை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக்கவும், அதே நேரத்தில் அதன் மூலம் கிடைக்கும் சிறு பணம், என்னுடைய வரவு செலவுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று விரும்பும் இல்லத்தரசிகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட பகுதி இது என்பதால், வணிகம் சார்ந்த எந்த ஒரு படைப்பும் இந்தப் பகுதியில் ஊக்கப்படுத்தப்படமாட்டாது, என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாங்க இனி இந்த வார தொழில் யோசனையைப் பார்க்கலாம்.

வித்தியாசமான யோசனைகள் செய்யவும், புதுமைகள் படைக்கவும், நீங்கள் பட்டதாரிகளாகவோ, ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த அவசரகால யுகத்தில் மக்களுக்கு நிற்பதற்கும் நேரம் இல்லை. உட்கார்ந்து பேசுவதற்கும் நேரம் இல்லை. நடுத்தரம், அடித்தட்டு வர்க்கத்தினர்களாக இருந்தாலும் சரி; இல்லையேல் முதல் தட்டு வகுப்பினராக இருந்தாலும் சரி, இந்த தத்துவம் பொதுதான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடனேயே மறுபடியும், டியூசன், கோச்சிங் வகுப்புகள் என்று அனுப்பும் பெற்றோர்கள்தான் இன்று நம்மிடையே அதிகம். கலாசாரம், நம்முடைய மரபுகள் அனைத்தையும் இளைய தலைமுறைகள், நாளைய தலைமுறைகள் மறந்துகொண்டே வருகின்றனர். ஆனால், எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் நமது கலாசாரத்தையும், மரபையும் கற்றுக்கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அதை கற்றுக்கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, உட்கார்ந்து பேச ஓய்வும் இல்லை. முன்பெல்லாம், பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை எல்லோரும் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக் கொடுத்தார்கள், தங்களது பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், இப்போது அந்த கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து தனிக் குடித்தனம்தான் பெரும்பான்மையாகிப்போனது.

இதுதான் உங்களுக்கான பகுதி. குழந்தைகளுக்கு கதை சொல்லித் தருவதுதான் வேலை. கேட்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், இந்தச் சூழ்நிலையில் மிகவும் அவசியமும் அதே நேரத்தில் பணம் கொட்டும் தொழிலும் கூட.

குழந்தைகள் கதை கேட்பதன் மூலம் அவர்கள் கவனம் குவிகிறது. உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது. ஞாபக சக்தி வளர்கிறது. மூளை சுறுசுறுப்படைகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. ஆராய்ச்சிகள் சொல்கிறது. சமீப காலமாக கதை சொல்லும் வழக்கு நம்மிடம் குறைந்துகொண்டே போவதால், கதை சொல்வதைக் கூட தொழிலாக செய்யக்கூடிய ஒரு அவலம் இங்கு ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு கதை கேட்பதன் மூலம், தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதே நேரத்தில், ஆராய்ச்சி மனப்பான்மை, படைப்பாற்றல் போன்ற பல அம்சங்கள் வளர்கின்றன.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது, ஒன்றே ஒன்றுதான். சிறப்பாக கதை சொல்ல தெரிந்திருக்க வேண்டும். எனக்கும் யாரும் கதை சொல்லி தந்ததில்லையே நான் என்ன செய்வது என்று புலம்ப வேண்டாம். கடைகளில் பழைய விலைக்கு எண்ணிலடங்கா கதைப் புத்தகங்கள், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையில் குவிந்துகிடக்கின்றன. அதைத் தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து படியுங்கள். பிறகு அதை குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுங்கள். அப்புறம் பாருங்கள், குழந்தைகள் உங்களை விடவே மாட்டார்கள்.

சென்னை போன்ற பெரும் நகரங்களில் கதை சொல்லும் தொழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் இந்தத் தொழிலை செய்யத் தொடங்குங்கள். நீங்கள் கதை சொல்லப் போகும் களத்தை, முதலிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள். உங்களிடம் கதைக் கேட்க வரும் குழந்தைகளின் வயது வரம்பை கணக்கில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு எப்படி கதை சொல்லலாம் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கு பெரியளவில் வரவேற்பு இருக்கும் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வகுப்பு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இந்த வகுப்புக்கு ஒதுக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தைவிட பெரிய அளவில் சம்பாதிக்க முடியும் மறந்துவிடாதீர்கள்.

SURABOOKS