SURABOOKS

நம் கையே மூலதனம்:

நரேஷ்குமார், (சலூன் மற்றும் ஸ்பா)

ஒரு காலத்தில் அரசு வேலை என்பது தான் பிரதானமாக இருந்தது.இளைஞர்கள் மத்தியிலும் அரசு வேலைக்கே முக்கியத்துவம் இருந்தது.அதற்கு பின் மென்பொருள் துறையில் ஆர்வத்தை காட்டினர்.பொறியியல் துறையில் ஒரு பெரும்பாலானோர் தங்கள் ஆர்வத்தை காட்டத்தொடங்கினர்.இப்படி தான் உலகத்தின் பார்வையும்,இளைஞர்களின் பார்வையும் மாறிக்கொண்டே இருக்கிறது.அது உலக பரிமாற்றங்களை அடிப்படையாய் கொண்டு மாறுபடுகிறது.அந்த வகையில் இந்த காலகட்டத்திற்கு மக்களும் ,இளைஞர்களும் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பது தொழில் துறையில்”தான்.

சொந்தமாக தொழில் தொடங்குவதில் தான் இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.அதற்கான காரணம் தொழில் துறையின் நுணுக்கங்களை அவர்கள் அறிந்துள்ளனர்.தொழில் துறையின் அத்தியாவசங்களை புரிந்துக்கொண்டுவிட்டனர்.அதனால் தான் இளைஞர்களை தொழில் துறை வெகுவாக கவர்ந்துள்ளது. தொழில் துறையில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் கல்வியிலும் ஜொலித்தவர்கள் என்று நாம் சொல்லிவிட இயலாது.கல்வியில் பின் தங்கிய எத்தனையோ பேர் தொழில் துறையில் ஜொலிப்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

அப்படி கல்வியில் பெருமளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தனக்கான தொழிலில் ஜொலித்து வரும் ஒரு இளைஞர்,வாய்ப்புகளை உருவாக்கி அதனை முறையாக பயன்படுத்திக்கொண்டு ,வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், சினிமா பிரபலங்கள் உட்பட பல வாடிக்கையாளர்களின் சிகை அலங்கார வல்லுநர்,தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டவர்.தனக்கு தெரிந்த வெற்றியின் ரகசியத்தை சொல்கிறார், சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஏ. நரேஷ்குமார்.

என் பெயர் நரேஷ்குமார்.எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.அப்பா வெல்டர் வேலை செய்து வந்தார்.நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.குடும்ப சூழ்நிலை காரணமாக எனது பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.எனக்கு சிறு வயது முதலே மற்றவர்களை அழகுபடுத்துவதில் எனக்கு ஆர்வம் உண்டு.அதனால் நான் பள்ளிப் டிப்பிற்கு பிறகு ஒரு சிறிய அளவிலான முடி திருத்தகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்கு சில வருடங்கள் வேலை பார்த்தேன்.பின் பல இடங்களில் எனது வேலையை மாறி மாறி செய்து வந்தேன்.நான் வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்தில் கடையை சுத்தம் செய்யும் வேலையையே செய்து வந்தேன்.

ஆனால் இந்த துறை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.அதனால் இந்த துறையில் என்னை மேம்படுத்திக்கொள்ள விரும்பினேன்.அதனால் பெங்களூரில் சிகை அலங்கார சம்பந்தமாக ஆறு மாதகால படிப்பு படித்தேன்.பின் மீண்டும் சென்னை வந்து எனக்கான வேலையை உறுதிபடுத்திக்கொள்ள விரும்பினேன், அதனால் சென்னையில் பிரபலமான ஒரு சிகை அலங்கார நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.அது உலக தரம் வாய்ந்த சிகை அலங்கார நிறுவனமானதால் நிறைய உயர்ரக வாடிக்கையாளைகளை கண்டுகொள்ள முடிந்தது.அங்கு ஏழு வருடங்கள் நான் வேலைபார்த்தேன். எனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை நான் உருவாக்கிக்கொண்டேன்.

நான் வாடிக்கையாளர்களிடம் தரம் பிரிப்பது என்பது இல்லை.என்னை பொறுத்தவரையில் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்க வேண்டும். முறையான வாடிக்கையாளர் சேவையே எந்த ஒரு தொழிலின் வெற்றிக்கும் அஸ்திவாரம் ,அதனை நான் முறையாக பின்பற்றினேன். எனக்கான ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை என்னுடைய வாடிக்கையாளர் சேவையே எனக்கு பெற்றுத்தந்தது. குறிப்பிட்ட வருடங்கள் வேலைபார்த்த பிறகு தனியாக நாமே ஒரு சிகை அலங்கார கடையை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு எண்ணம் வந்தது.அதனை நான் வீட்டில் சொல்லிய போது எல்லாரையும் போலவே எனக்கும் எதிர்பு தான் வந்தது. ஆனால் எனக்கு என் தொழில் மேலேயும்,என் மேலேயும் அதீத நம்பிக்கை இருந்தது. ஆனால் புது தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் இடம், கடைக்கு தேவையான பொருட்கள் என முதலீடு வேண்டும்.அதற்கான பணத்திற்காக அலைய நேர்ந்தது. நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் கடன் வாங்கி நான் எனது சொந்த சிகை அலங்கார கடையை ஆரம்பித்தேன். ஆனால் இன்று நான் வாங்கிய கடனை முழுவதும் திருப்பி செலுத்தி, வளர்ந்துகொண்டிருக்கிறேன்.

சிகை அலங்கார கடையை பொறுத்தவரை கடையின் தோற்றம் தான் நமக்கான முதல் அங்கீகாரத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.கடையின் தோற்றமும்,நாம் பயன்படுத்தும் கருவிகளும் அதிநவீனமாக இருத்தல் மிகவும் முக்கியம்.

வெறும் கடையின் தோற்றம் மட்டும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திவிடாது. வாடிக்கையாளர் சேவை மிகவும் முக்கியம், ஒவ்வொருவரின் தன்மைக்கு ஏற்றார் போல் பேச வேண்டும். அவர்களது முடி தன்மையை பற்றி அவர்களிடம் கலந்துப்பேச வேண்டும். முறையான வாடிக்கையாளர் சேவை நம்மிடம் வாடிக்கையாளர்களை நம்மிடம் சேர வைக்கும்.

நாம் ஒரு தொழில் மீது காதல் கொண்டு அந்த தொழிலை தொடங்க நினைக்கிறோம் என்றால் முதலில் அந்த தொழில் சம்மந்தமான அனுபவங்களை முதலில் நான் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த தொழில் சம்மந்தமான நுணுக்கங்களை நாம் கற்று கொள்ள வேண்டும். அடுத்து முறையான திட்டமிடல் வேண்டும். ஆர்வத்தில் குதித்து தாடாலடியாக இறங்கிவிட கூடாது. ஒரு தொழில் தொடங்கும் முன் பொறுமையும், நிதானமும் அவசியம்.

எனக்கு வாடிக்கையாளர்கள் என்று சினிமா பிரபலங்கள், கல்லூரி இளைஞர்கள் போன்றவர்கள் தான் அதிகம்.சில பெண்கள் கூட அவர்களது சிகை அலங்கார மாற்றத்திற்காக என்னை அணுகுகின்றனர்.

இளைஞர்களாகிய நாம், குடும்ப பின்னனி இல்லாமல் ஒரு தொழிலை தொடங்க போகிறோம் என்றால் அதன் தன்மையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். வரும் எதிர்ப்புகளுக்கு நம் தன்னம்பிக்கையை கொண்டே நாம் பதில் சொல்ல வேண்டும். தொழில் தொடங்கிய பின்னும் நம் ஆர்வத்தை தொடர வேண்டும். நமக்கான வாய்ப்புகளை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

படிப்பு என்பது அத்தியாவசியம் தான்.ஆனால் தொழில் துறையில் முன்னேற அனுபவ அறிவும், தன்னம்பிக்கையும், சரியான திட்டமும் தான் நம்மை தொழில் துறையில் முன்னேற வைக்கும்.

SURABOOKS