SURABOOKS

தொழில் முனைவோர் – 6

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் விலைவாசி ஏற்றம் விண்ணை எட்டித் தொட்டுவிடும் அளவிற்கு உள்ளது. நாளுக்குநாள் அன்றாடப்பொருட்களின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கிராமப்புற மக்களே ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட பண மதிப்பீட்டில் சுருக்கி வாழத் தொடங்கிவிட்டனர். அப்படி என்றால் நகர வாசிகளின் நிலைமையை சொல்லவே வேண்டாம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எல்லாமும் கிட்டதட்ட செலவு கணக்குக்குள் தான் வரும். நகர வாழ்க்கையில் நடுத்தர குடும்பத்தை கையைக் கடிக்காமல் ஓட்ட வேண்டும் என்றால், வீட்டில் இருவரும் வேலைக்கு சென்றால் தான் சரிப்பட்டு வரும் என்பதே தற்போதைய நகர வாசிகளின் நிலை. வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தேவை கூட இல்லை. நம்மால் சமாளிக்கும் அளவிற்கான எத்தனையோ சிறு மற்றும் குறு தொழில்கள் உள்ளன. தொழில்களின் தரம் அவரவர்களின் தகுதியைப் பொறுத்தது தான். தொழில் என்றாலே உயர் படிப்புத்தான் தேவை என்ற கட்டாயம் இல்லை. சொந்தத் தொழில் என்றாலே அலைந்து திரிந்து உழைக்க வேண்டி வரும். இது ஆண் வர்க்கத்திற்கு தான் சரி என்று நமக்கு நாமே சில காரணத்தையும் கூறுகிறோம். அது முற்றிலும் தவறு. உழைப்பும் நம்பிக்கையும் கொண்ட எவருக்கும் வெற்றி எட்டும் தொலைவுதான். இதற்கு எடுத்துக்காட்டாக உலக நாடுகளில் எவரையும் நாம் தேடதேவையில்லை. சென்னை போரூரைச் சேர்ந்த அருள் ஷோபி என்ற பெண்மணியை இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இனி ஷோபி சொல்வதைக் கேளுங்கள் …

எனக்கு சொந்த ஊரே சென்னை தான். கணவர் சொந்த தொழில் செய்து வருகிறார். நான் பி.காம். வரையில் படித்திருக்கிறேன். நான் படித்து முடித்த காலகட்டத்தில் தனியார் அலுவலங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றேன். திருமண வாழ்க்கைக்கு பிறகு வேலைக்குச் செல்லவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒருவரின் மாத வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகக் கடினம். அதனால் நானும் ஏதாவது வேலைக்குச் செல்லலாமா என்று யோசித்தேன். என் கணவர்தான் வேலைக்கு செல்வதைவிட ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று யோசனை கூறினார். நான் இருக்கும் பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் என்று எதுவும் இல்லை. எனவே அது சம்பந்தமாக ஏதாவது தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தேன். பியூட்டி பார்லர்க்கான இரண்டு மாத பிரத்யேக படிப்பை முடித்தேன். அதன் பின் அந்த தொழிலுக்கான ஆரம்பகட்ட செலவுக்காக ஏதாவது அரசாங்க கடன் உதவி கிடைக்குமா என்று தேடுகையில் தான் தமிழக அரசின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (UYEGP) பற்றி தெரிந்துக்கொண்டேன். இந்தத் திட்டத்தின் நோக்கம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக வலுவுறா பகுதியினரின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது ஆகும்.

அதன் பிறகு நான் பியூட்டி பார்லர் சம்பந்தமான சில புள்ளி விவரங்களை சேகரித்து கொண்டேன். பின் எனது பியூட்டி பார்லர் தொழில் தொடர்பான முழு திட்டத்துடன் சென்னை, கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை அணுகினேன். முதலில் எனக்கு ஒரு நேரடி கலந்தாய்வு வைக்கப்பட்டது, கலந்தாய்வில் நான் தொடங்க இருக்கும் தொழிலின் நோக்கம் என்ன? என்னால் அந்த தொழிலை சரிவர கையாள முடியுமா? தற்பொழுதுள்ள சமூக கால கட்டத்திற்கு நான் ஆரம்பிக்கும் தொழில் சரிவருமா? என்றெல்லாம் கேட்டு தொழில் சம்பந்தமாக நான் கொண்டுள்ள மன உறுதியை சோதனை செய்தார்கள். அதை நாம் சரிவர கடந்துவிட்டால் அடுத்து பதினைந்து நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் நமது தொழில் சம்பந்தமான எந்த பயிற்சியும் கொடுக்கப்படுவதில்லை. பொருளாதார ரீதியாக, கணக்கு வழக்குகளை கையாளும் முறை,தொழிலின் நோக்கம் பற்றியும், தொழில் முனைவோர் கவனிக்க வேண்டிய பல விஷயங்களையும் சொல்லித் தந்தார்கள். அந்த வகுப்பு எனக்கு பெருமளவில் பயனுள்ளதாக இருந்தது. அந்த வகுப்பிற்கு பிறகு தான் நம் தொழிலுக்கேற்ற பண உதவியை அளிக்கிறார்கள். இந்த பண உதவி, சேவை சம்பந்தமான தொழில்கள் என்றால் 3 லட்ச ரூபாயாகவும், உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றால் 5 லட்ச ரூபாயாகவும், வியாபாரம் சார்ந்த தொழிலென்றால் 5 லட்ச ரூபாயாகவும் வரை கடனுதவியாக வழங்கப்படுகிறது.

இந்த பண உதவியை நமக்கு விருப்பமான, வசதியான எந்த ஒரு வங்கியின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். வங்கியிலும் நாம் செய்ய இருக்கும் தொழிலின் திட்ட வடிவம், நாம் கடன் உதவிக்கு அணுகிய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட உறுதி சான்றுகள், மற்றும் நாம் அந்த குறிப்பிட்ட தொழிலுக்காக பெற்றுள்ள அனுபவ சான்றிதழ்கள், நாம் அந்த தொழிலுக்கு பிறகு கட்ட நேரும் வரி சம்பந்தமான சான்றிதழ்கள், நாம் தேர்ந்தெடுத்துள்ள இடத்தின் உறுதி சான்றிதழ்கள் போன்ற சில ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இவைகளெல்லாம் நன்கு ஆலோசித்த பிறகே நமக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியை நாம் அரசு திட்டத்தின் மூலம் அணுகுவதால், சான்றுகளை நாம் சரிவர வழங்கினால் நமக்கு கடன் பெறுவதில் எந்த ஒரு சிரமும் இருப்பதில்லை. இந்த கடன் உதவியை நாம் தவணை முறையில் திருப்பிக்கட்ட வேண்டும். அரசு மொத்த தொகையில் sc/st பிரிவினர்களுக்கு 2% மானியமும், மற்ற பிரிவினர்க்கு 1% மானியமும் தருகிறது. இந்த தொகையை கொண்டு நான் பியூட்டி பார்லர் தொடங்கினேன். இப்பொழுது பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடமும் நடத்தி வருகிறேன். விரைவில் இன்னமொரு கிளையையும் தொடங்க இருக்கிறேன். பெண்களைப் பொறுத்த வரை தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால், அது குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் தான் உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தான் பெண்களை தொழில் துறையில் கடினமாக காலூன்ற வைக்கும். பெண்கள் குடும்ப நிர்வாகத்தையும் சமாளித்து, தொழிலையும் சமாளிப்பது சவாலான விஷயம் தான். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, திட்டமிடல், தன்னம்பிக்கை இவையிருந்தால் போதும், எல்லாத் துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். இந்த தொழில் குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 76676 60808.

SURABOOKS