SURABOOKS

தொழில் முனைவோர் – 5

உலகம் வேகமாகி முன்னேறி வருகிறது. அனைத்து களங்களிலும் கால் பதித்து வருகிறான் மனிதன். இணையாக பெண்களும் உலக முன்னேற்றம் என்ற ஓட்டத்தில் ஓட தொடங்கிவிட்டார்கள். பெண்கள் என்றால் வீட்டுவேலைகளுக்கும், பேறுக்காகவும் என்ற காலம் கரையேறிவிட்டது. பாரதி கண்ட புதுமைப் பெண்களை நாம் காணத் தொடங்கி விட்டோம். ஆண்கள் களம் காணும் அனைத்து துறைகளிலும் பெண்கள் களம் இறங்கிவிட்டார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்தான். சொந்தத் தொழில் தொடங்கிய தொழிலதிபர்கள் என்று நாம் கணக்கிட்டு பார்த்தால், ஆண்களை விட பெண்களின் சதவீதம் ரொம்ப குறைவுதான். அதற்குப் பல காரணங்களை நாம் கூறி வந்தாலும், அந்த அளவிற்கு ஓடி, முடியாது என்று சப்பைக்கட்டு கட்டிவிடுகிறோம். அதனால் பல தொழிலதிபர்களின் வளர்ச்சிக்கு ஊக்கப்படுத்தும் இடத்தையே பெண்கள் பிடித்திருக்கிறார்கள். ஆனால் பெண்களும் தொழில் துறையில் களம் காண வேண்டும். ஆர்வமாகத்தான் இருக்கிறோம், எங்கு தொடங்குவது, எவரை அணுகுவது என்றுதான் புரியவில்லை, என்ற குழப்பத்தில் இருக்கும் நபரா நீங்கள். அப்படி என்றால் நிச்சயம் நீங்கள் இன்று தெளிவடைந்து விடுவீர்கள். சென்னையை சேர்ந்த மாதங்கி என்பவரும், இதுபோல பல குழப்பங்களில் இருந்தவர்தான். மாதச் சம்பளம் என்பதையும் மீறி சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர், வாய்ப்புகளைச் சரிவர பயன்படுத்திக் கொண்டவர். இன்று பெண்களுக்காகவே பிரத்யேகமாக அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார். தான் அடைந்த கண்ட வெற்றி ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ரகசியம் அறிவோம்.

எனக்கு சொந்த ஊரே சென்னை தான். ரயில்வே துறையில் வேலை பார்த்தார் . எம். ஏ. பட்டம் படித்திருக்கிறேன். பட்டம் பெற்றதும் திருமணம் நடந்தேறியது. நான் படித்த படிப்பை அடிப்படையாய் கொண்டு டெல்லி மற்றும் சென்னையில் பல இடங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். மாதச் சம்பளத்திற்கு ஒரு வேலையில் பணியாற்றி வந்தாலும், கணவர் தொழில் செய்து வருவதால் எனக்கும் தொழில் துறை மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பெண்ணாகிய நம்மால் என்ன தொழில் செய்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்து என் ஆர்வத்தை சாகடித்துவிடும். குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நான் தொழிலில் களம் இறங்க வேண்டும் என்ற பிடிவாத எண்ணம் எனக்குள் வந்தது. என் கணவரிடம் சொன்னேன், எனக்கு பெரிய பக்கபலமாக இருந்தார். ஆனால் என்ன தொழில் செய்வது, ஓரளவிற்கு சாமாளிக்க கூடிய தொழிலாக இருந்தால் எளிதாக இருக்கும் என சில தொழில்களை பற்றி ஆராய்ந்து வந்தேன். நான் உணவகம் தொடங்குவது என தீர்மானித்திருந்தேன். ஆனால் எனது தோழிகள் பலர் உடற்பயிற்சி நிலையம் செல்கின்றனர், அவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியவில்லை என பேசிக்கொண்டதை கேட்டிருக்கிறேன். அதுதான் எனக்குள் விழுந்த பொறி. அதையே ஏன் தொழிலாக தொடங்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். சென்னையில் உள்ள பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தேன். பல இடங்களில் உள்ள உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தோடு இணைந்து ஒரு உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் அதற்கான முதலீட்டுக்கு என்ன செய்வது? அணுகுவது என தெரியவில்லை,தமிழக அரசின் தொழின் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு திட்டமாகிய நீட்ஸ் பற்றி அறிந்தேன்.

பிறகு நான் தொடங்க இருக்கும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தின் ஆரம்ப திட்டம், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பண முதலீடு பற்றிய விவரங்கள், மத்தியில் எனது தொழிலாகிய உடற்பயிற்சி கூடத்தின் தேவை, தொடங்கும் தொழிலின் ஆண்டு வருமானம் போன்றவற்றின் தோராய அளவீட்டை கொண்டு திட்டமிட்டு ஒரு திட்ட வடிவத்தை உருவாக்கினேன். அந்த திட்ட வடிவத்துடன் நான் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை அணுகினேன். திட்ட வடிவம் சரியாக இருந்ததால் எனக்கு ஒரு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. பின் ஒரு நேர்முகத்தேர்வு வைத்தார்கள்.நேர்முகத்தேர்வை 12 பேர் கொண்ட ஒரு குழு வழி நடத்தியது.

இந்த நேர்முகத் தேர்வில் நான் தொடங்க இருக்கும் உடற்பயிற்சி கூடத்தின் திட்ட வடிவம், முதலீட்டு விவரங்கள், நிலையம் தொடர்பாக நான் கொண்டுள்ள அனுபவ அறிவு, நிலையத்திற்கு தேவையான உபகரணங்களின் விவரங்கள்,கூடம் அமைய இருக்கும் இடம் பற்றிய தகவல்கள்,மத்தியில் எனது தொழிலின் வரவேற்பு, தொடர்பாக நாம் கொண்டுள்ள விவரங்கள் முழுவதும் அங்கு கேட்கப்பட்டன. அந்த நேரடி கலந்தாய்வில் வெற்றி பெற்ற பிறகு அதற்கு பின் ஒரு மாத கால பயிற்சி வகுப்பு வைக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் வரவு, பராமரிப்பு, நடத்தும் முறை, நிலை சம்பந்தமான தகவல்கள் போன்ற அத்தியவாசிய விஷயங்கள் இந்த பயிற்சி வகுப்பில் சொல்லித்தரப்பட்டது. பயிற்சி வகுப்பை சென்னையின் பலதரப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் நடத்தினர். நாம் தொடங்க இருக்கும் தொழிலின் மீது நாம் எந்த அளவு தெளிவு இருந்தாலும் இந்த பயிற்சி வகுப்பு நமக்கு தொழில் துறை பற்றி ஒரு புது அனுபவத்தை கற்று தரும். தெரிந்து கொள்ளாத தொழில் துறையின் புது நுணுக்கங்களை அது நமக்கு கற்று தரும். எனது கடனுதவிக்கான வங்கியை நானே தேர்வு செய்தேன் .

நம் உரிமை தான் எந்த ஒரு வங்கியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். வங்கியை பொறுத்த வரையில் நான் அந்த உடற்பயிற்சி கூட தொழிலுக்காக பெற்றுள்ள அனுபவ சான்றிதழ்கள், அந்த தொழிலுக்கு பிறகு கட்ட நேரும் வரி சம்பந்தமான சான்றிதழ்கள், தேர்ந்தெடுத்துள்ள இடத்தின் உறுதி சான்றிதழ்கள், இணைந்து செயல்பட கூடிய உடற்பயிற்சி கூடத்தின் உறுதி சான்றிதழ்கள் போன்ற சில ஆவணங்களை ஒப்படைத்தேன். நாம் கேட்ட கடன் உதவிக்கு பாதுகாப்புக்காக எனது சொத்து விவரங்களை அளித்தேன். இந்த ஆவணங்கள் பொதுவாக அனைத்து வங்கிகளிலும் கேட்கப்படுகிறது, தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தில் நாம் பெற்றுள்ள பயிற்சி சான்றிதழ்கள் ஆகியவற்றை வங்கியிடம் ஒப்படைத்தேன். பின் எனக்கான கடனை வங்கி அளித்தது. இந்த கடன் தொகையை வங்கி நம்மிடம் முன்று தவணைகளில் வழங்கியது. விண்ணப்பம் பூர்த்தி செய்தது முதல் நம் கையில் பணம் வந்து சேரும் வரை அதிகபட்சம் ஐந்து மாதங்கள் பிடிக்கும். எனது உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறேன். நானும் இந்த தொழில் ஆரம்பிக்கும் போது, இது பெண்ணாகிய நம்மால் முடியுமா? என்ற பல எண்ணங்களால் குழம்பி போனேன். இன்று ஒரு முதலாளியாக வலம் வந்துகொண்டிருக்கிறேன். தொழில் தொடங்க இருக்கிறோம் என்றால் குடும்பம், உடல் ஆரோக்யம் போன்ற பல முட்டுகட்டைகள் நமக்கு இருக்கத்தான் செய்யும். அதனை சமாளித்து எப்படி வருகிறோம் என்பதே நம் வெற்றியை தீர்மானிக்கும். அதனை போல தொழில் தொடங்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் மிகவும் முக்கியம். அப்புறம் என்ன குழப்பம், வாய்ப்புகளை உபயோகப்படுத்தி நீங்களும் தொழில் முனைவோர் ஆகுங்கள்.
வாழ்த்துகள்.

SURABOOKS