SURABOOKS

தொழில் முனைவோர் – 2

“பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இந்த சமூகமும் படித்தவர்களைத் தான் பெரிதும் மெச்சுகிறது. படிக்காத மக்களை இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை, படிக்காதவர்களுக்கு என சில வேலைகளை இந்த சமூகம் எழுதப்படாத சட்டமாக வகுத்தே வைத்து விட்டது. படித்தவர்களுக்கே இங்கு சலுகைகளும்,வாய்ப்புகளும் பெரிதும் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ ஒரு குடும்பச் சூழ்நிலையால் நாங்கள் படிக்காமல் போய் விட்டோம், அதனால் இப்போது நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், உங்கள் உறவினரோ, நண்பரோ பேசக் கேட்டாலும், அது மிகவும் தவறான கருத்து எண்ணம் ஆகும். அவர்கள் இன்னும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை கவனிக்கவேயில்லை என்பதே உண்மை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, இன்று சென்னை திருவான்மியூரில் ஒரு பெரும் அதிநவீன உடற்பயிற்சிக் கூடம் நடத்தி, ஒரு முதலாளியாக வலம் வரும் குமரவேல் தான் இன்று திருவாளர் தொழில்முனைவோரின் நாயகன், வாருங்கள் அறிவோம் வாய்ப்புகளை…
எனது பெயர் குமரவேல். எனக்கு வயது 38 ஆகிறது. எனக்கு சொந்த ஊரே சென்னை தான். என் தந்தை ஒரு வாகன ஓட்டுநர். எனது குடும்பச் சூழ்நிலையால் நான் பெரிய அளவில் படிக்க இயலவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். பத்தாம் வகுப்பு படித்தவனுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து வகையான வேலைகளையும் நான் பார்த்திருக்கிறேன். காலம் செல்லச் செல்ல படிப்பின் அருமை புரிந்தது. ஆனால் அதே நேரத்தில் படிக்காமலும் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையை மட்டும் நான் விடவே இல்லை. எனக்கு இளம் வயது முதல் உடற்கட்டை பேணிக்காப்பதில் ஆர்வம் உண்டு. சில உடற்பயிற்சிக் கூடங்களில் நான் மாத சம்பளத்திற்கு வேலையும் பார்த்திருக்கிறேன். அதனால் சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு ஆரம்ப முதலீடு தேவைப்பட்டது. அதிக அளவில் படிப்பில்லாத நமக்கு வங்கியில் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு. பல வழிகளில் கடனுக்கு அலைந்த போதுதான் நான் தமிழக அரசின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (UYEGP) பற்றித் தெரிந்துக்கொண்டேன்.
இது சம்பந்தமாக நான் எனது தொழில் முறையின் முழு திட்டத்துடன் சென்னை, கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை அணுகினேன். முதலில் எனக்கு ஒரு நேரடி கலந்தாய்வு வைக்கப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் நான் தொடங்க இருக்கும் தொழிலின் நோக்கம் என்ன? என்னால் அந்தத் தொழிலை எந்த அளவுக்கு கையாள முடியும்?, தற்பொழுதுள்ள சமூக கால கட்டத்திற்கு நான் ஆரம்பிக்கும் தொழில் சரி வருமா? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி தொழில் சம்பந்தமான எனது மன வலிமையைச் சோதனை செய்தார்கள். அதில் நான் வெற்றிபெற்றுவிட்டதால் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். இந்த வகுப்பில் பொருளாதார ரீதியாக, கணக்கு வழக்குகளை கையாளும் முறைப்பற்றியும், தொழிலின் நோக்கம் பற்றியும், தொழில் முனைவோர் கவனிக்க வேண்டிய பல விஷயங்களைக் குறித்தும் சொல்லித் தந்தார்கள். அந்த வகுப்பு எனக்கு பெருமளவில் பயனுள்ளதாக இருந்தது. அந்த வகுப்பிற்கு பின்னர் நம் தொழிலுக்கேற்ற பண உதவியை அளிக்கிறார்கள்.
சேவை சம்பந்தமான தொழில்கள்-3 லட்சம்
உற்பத்தி சம்பந்தமான தொழில்கள்-5 லட்சம்
வியாபார சம்பந்தமான தொழில்கள்-1 லட்சம்
என்று தொழில் உதவித்தொகைகள் பல்வேறு விதமாக பிரித்து அளிக்கப்படுகின்றன.
இந்தப் பண உதவியை நமக்கு விருப்பமான, வசதியான எந்த ஒரு வங்கியின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். வங்கியிலும் நாம் செய்ய இருக்கும் தொழிலின் திட்ட வடிவம், நாம் கடன் உதவிக்கு அணுகிய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட உறுதி சான்றுகள், ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்த பிறகே நமக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியை நாம் அரசு திட்டத்தின் மூலம் அணுகுவதால், சான்றுகளை நாம் சரிவர வழங்கிவிடும்போது நமக்குக் கடன் பெறுவதில் எந்த ஒரு சிரமமும் இருப்பதில்லை. இந்தக் கடன் உதவியை நாம் தவணை முறையில் திருப்பிக்கட்ட வேண்டும். அரசு மொத்தத் தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கு 25% மானியமும், மற்ற பிரிவினர்க்கு 15% மானியமும் தருகிறது. முடிந்த வரை இந்த மாதிரியான திட்டத்தை நம் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் பெரியளவில் படிக்கவில்லை என்றாலும், இன்று ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு முதலாளியாய் இருக்கிறேன். என்றார் குமரவேல்.
படிப்பில்லை என்று மனம் தளராமல் நம்மை சுற்றியுள்ள வாய்ப்புகளை நன்றாக கவனித்துப் பாருங்கள், திறமையும், உழைப்பும் இருந்தால் நாமும் நாளை தொழிலதிபர் தான். வாருங்கள் முன்னேறுவோம்.
இதே போன்று உடற்பயிற்சிக்கூடம் (ஜிம்) போன்ற தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் குமரவேலைத் தொடர்பு கொள்ளலாம். அவருடைய செல்பேசி எண்: 9789047906.

SURABOOKS