SURABOOKS

தொழில் முனைவோர் – 1

அரசுப் பணி, தனியார் பணி என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. என்னதான் இருந்தாலும், தான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்று நினைப்பவர்களுக்கான பகுதி இது.  சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்றுஆசை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது, திட்டங்கள் இருக்கின்றன.  ஆனால், என்னை நம்பி யார் பணம் தருவார்கள்? முறைப்படி ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது? அதை எப்படி அங்கீகாரப்படுத்துவது? இப்படி நிறையக் குழப்பங்கள்தான் நம் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு, கிடைத்த ஏதாவது ஒரு வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலை நமக்கு வந்துவிடுகிறது.  உங்களுக்கு இருக்கும் சின்னச் சின்ன சந்தேகங்களுக்காக உங்களுடைய கனவை மூட்டைக்கட்டிப் போடலாமா? வாருங்கள்… உங்கள் சந்தேகத்தை நாங்கள் களைகிறோம்.
இந்தப் பகுதியில் சொந்தமாகதொழில்தொடங்கியவர்கள் பற்றிய விவரம், அந்தப் தொழிலுக்கு வர  என்னென்ன கஷ்டப்பட்டார், யாரிடம் உதவி கேட்டார் போன்ற அனுபவ உண்மைகளை அவர் மூலமாக உங்களிடம் பகிரப்போகிறோம்.
சென்னை வேளச்சேரியில் பிளாஸ்டிக் மறுசுழற்ட செய்து அதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்துவரும் எஸ்.ஜே. ஞானகுமார்தான் இந்த இதழின் தொழில் முனைவோர்.
எனக்கு சொந்த ஊரே சென்னைதான்.  அப்பா ஆசிரியர்.  இப்போ ரெட்டயர்டு ஆகிவிட்டார்.அடிப்படையில் நான் ஒரு பொறியியல் பட்டதாரி.  ஆரம்பத்தில் டூல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தேன்.  அதற்குப் பிறகு மெக்கானிக்கல் பிரிவில் பி.டெக்.படித்தேன்.என்னுடைய டிப்ளமோ தகுதி அடிப்படையில்தான்  அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பணியில் சேர்ந்தேன்.  ஆரம்பத்தில் 1500 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.  அதற்குப் பிறகு இருங்காட்டுக்கோட்டை, திருவள்ளூர், கோவை என பல்வேறு இடங்களில் என் படிப்பிற்கேற்ற வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  8 வருடங்கள் இப்படியாகப் போனது. அதற்குப் பிறகு பதவி உயர்வு கிடைத்து ஓரளவு வருமானமும் கிடைத்தது.
ஆனால், அந்த வேலையில் எல்லாம் எனக்கு மனதிருப்தி கிடைக்கவில்லை. டிப்ளமோ படித்துமுடித்துவிட்டு பணிபுரிந்து கொண்டிருக்கும் நேரத்தில்தான் எனக்குத்  தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் பற்றி தெரிய வந்தது.  அந்த நிறுவனம் சொந்தமாகதொழில் தொடங்கும் எண்ணம் உள்ளோர், ஏதேனும் தொழில் சார்ந்த யோசனைகள், திட்டங்கள் ஏதேனும் வைத்திருந்தால், அங்குத் தரும் அறிவுரைகள், உதவிகளை வைத்து நிச்சயம் சிறந்த தொழில் முனைவோராக ஆக முடியும் என்பது நேரில் போய் பார்த்துதெரிந்தகொண்டேன்.  அதுமட்டுமல்லாமல், சொந்தமாகதொழில்தொடங்க நினைப்போருக்கு சிறந்த பயிற்சியும், வழிமுறையையும் கற்றுத்தருகிறார்கள்.
அந்த மையத்தில் முறைப்படி ஒரு மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.அப்போதுதான் அங்கு NEEDS (New Entrepreneur cum enterprise Development Scheme) என்ற திட்டம் பற்றி தெரிந்துகொண்டேன்.  முதலில் எந்த ஒரு தொழில் தொடங்க யோசனை இருந்தாலும் அதனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொண்டால்தான் அந்தத் தொழிலில் வெற்றிபெற முடியும் என்று எனக்குப் புரிந்தது.  பிறகு பிளாஸ்டிக் மறுசுழற்சி பற்றி படித்தேன். இதற்கு முன்பு சென்னையில் யாரெல்லாம் இந்தத்தொழில் செய்கிறார்கள்? எப்படி செய்கிறார்கள்? லாபம் எப்படி? எப்படி கொள்முதல் செய்கிறார்கள்? எங்கு விற்பனை செய்கிறார்கள்? இவர்களின் வியாபாரச் சந்தை எது? எதிர்காலத்தில் நான் செய்ய திட்டமிட்டிருக்கும் தொழிலின் வளர்ச்சி, அதற்கான தேவைகள் எப்படி இருக்கும்? சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன? இப்படி பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேட நேரடியாக களப் பணி செய்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டேன்.
ஓரளவு செய்யும் தொழில் பற்றிய விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டபின் புதிய தொழில் முனைவோருக்கான திட்டத்திற்கு விண்ணப்பித்தேன்.  அவர்கள் நடத்திய நேர்முத் தேர்வில் நான் தேர்ச்சிப்பெற்றேன்.  இந்த நேர்முகத் தேர்வில் நாம் செய்யப்போகும் தொழில்குறித்து எவ்வளவு அறிவு பெற்றிருக்கிறோம் என்பது சோதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்தத் தொழிலில் சாதிக்கக்கூடிய திறமை சம்பந்தப்பட்ட நபர் பெற்றிருக்கிறாரா போன்ற பல விஷயங்கள் சோதிக்கப்படுகிறது.  இந்த நேர்முகத் தேர்வு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவே நடத்தப்படுகிறது.
இந்த நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றப் பிறகு என் தொழில் சார்ந்த பயிற்சி ஒரு மாதம் அந்த நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது.  இந்த பயிற்சியின் போது, தொழிலுக்கான கடன்பெறும் முறைகள், அதை திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள், சந்தைப்படுத்துதல், மூலப்பொருள்கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள்.  இதற்கு முன் இந்தத்தொழில் நடத்துபவர்களின் யோசனைகள் இப்படி எல்லாமுமே அந்தப் பயிற்சியின் போது நமக்குக் கிடைக்கும்.
இந்தப் பயிற்சி முடிந்தபிறகு, நமக்கு வசதியிருப்பின் நம் கைக்காசு கொண்டு நாமே தொழில்தொடங்க முடியும்.  அல்லது நாமாக நமது திட்டத்தின் அடிப்படையில்வங்கிக்கடன்பெற்றுக்கொண்டு, தொழில்தொடங்கலாம்.  அப்படியும் முடியவில்லையென்றால், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமே வங்கிக் கடனுதவிக்கு வழிகாட்டுகிறது.  இந்த நிறுவனத்தின் மூலம் தொழில் தொடங்கும்போது நம் தொழிலில் 20 சதவீத மின்சாரம் மானிய அடிப்படையில் நமக்கு வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் நிறுவனத்தின்உதவியின் மூலம் வங்கிக்கடன் பெற்று இப்போது சொந்தமாக பிளாஸ்டிக் மறு உற்பத்தி நிறுவனம் நடத்திவருகிறேன்.  தொழில் என்றால் ஏற்றத்தாழ்வுகள் வருவது இயல்புதான்.  ஆனால், ஏற்றம் வரும்போதுஅதில்கிடைக்கும் லாபத்தைச் சேமிப்பில் வைத்துக்கொண்டு, இறக்கம் வரும்போது அதை முதலீடாக வைத்துக்கொண்டு தொழிலில் இன்னொரு படி முன்னேற வழி தேடவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.
எந்த ஒரு தொழிலுக்கும் ஆசை மட்டும் இருந்தால் போதாது.  அதையும் தாண்டி, நுட்பமான தேடல், கற்றுக்கொள்ளல், நிதானம், பொறுமை, தன்னம்பிக்கை இவ்வளவும் வேண்டும். எந்த ஒரு சொந்தத் தொழில் தொடங்குபவர்களும் இந்தத் தொழில் தனியாக நடத்தப் போகிறீர்களா? அல்லதுகூட்டு சேர்ந்து நடத்தப் போகிறீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.  கூட்டு சேர்ந்து நடத்தப்போவதாக இருந்தால், அதற்கான உறுதிமொழி பத்திரம், கூட்டு சேர்பவரின் பின்புலம், நடத்தை இவற்றையெல்லாம் பாரபட்சமில்லாமல் சோதித்தப் பிற்பாடு கூட்டுத்தொழில் பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துங்கள்.
நான்தயாரிக்கும் பிளாஸ்டிக்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கும் பிளாஸ்டிக்பொருட்கள் என்றாலும் முதல்தரத்திற்கும் இரண்டாம் தரத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.  சொல்லப்போனால், விற்பனைவிலை முதல்தரத்தைவிடகுறைந்தவிலைக்கு விற்க முடியும் என்பதால், இது மக்கள் மத்தியில் சிறந்தவரவேற்பை பெற்றுள்ளது.  சொந்தமாகதொழில்தொடங்க விரும்புவோர் யாராக இருந்தாலும் சரி, முதலில் உங்கள் திட்டம் பற்றி நீங்கள் உயர்வாககருதுங்கள்.  அது குறித்த விவரங்களை அறிவியல் பூர்வமாக, ஆக்கப்பூர்வமானதகவல்களைச் சேகரித்துத் தெரிந்து வைத்துக்கொண்டால், நீங்களும்  சிறந்த தொழில்முனைவோர்தான் என்றார் ஞானகுமார்.

SURABOOKS